Friday, May 30, 2014
தலைமைத்துவம் (Leadership)
எந்த ஒரு மனிதனின் நடத்தை மற்றவர்களின் நடத்தையின் மாறுதலை தன்னில் ஏற்படுத்தும் மாற்றத்தை விட அதிகமாக ஏற்படுத்துகின்றதோ அந்த நடத்தையே
தலைமைத்தன்மையாகும். தலைவன் தன் நடத்தையால் குழுவின் நடத்தையில் ஒரு மாற்றத்தை விளைவிக்கிறானேயன்றி குழுவின் நடத்தையால் தன் நடத்தையில் ஒரு மாற்றத்தையோ அல்லது குழுவின் செயல்களுக்கேற்பத் தன்னை அவர் மாற்றிக் கொள்வதோ தலைமைத்துவம் அல்ல. Burn Zchoes Selznick என்னும் உளவியலாளர் பின்பற்றுவோரைச் செயற்படத் தூண்டும் செயற்பாடு தலைமைத்துவமாகும் என்கின்றார்.
தலைமைத்துவத்தின் சிறப்பு தலைமைத்தவத்தின் சிறப்பானது தனதும் தன்னைப் பின்பற்றுவோரதும் விழுமியங்களையும் (Values) ஊக்கங்களையும் (Motivation) நோக்குகின்ற பார்வையில் தங்கியுள்ளது எனலாம்.ஒகியோ பல்கலைக்கழகம் (ஐ.அமெரிக்கா) ஆய்வில் தலைமைத்துவத்தின்
நடத்தைகளில் நான்கு முக்கிய காரணிகள் குறிப்பிடப்படுகின்றன.
1. பிறர் நலச் சிந்தனை (Consideration)
2. குழு அமைப்பினைத் தொடக்கி வைத்தல் (Initiating Structure)
3. உற்பத்திக்கு வலியுறுத்தல் (Production Emphasis)
4. சமூக நுண்ணுணர்வு (Social awareness)
தலைமைத்துவத்தின் வகைகள்
பின்வரும் வகையில் தலைமைத்துவ வகைகள் உளவியலாளரால் முன் வைக்கப்படுகின்றன.
1. நிறைவேற்றுத் தலைவர் (Administrator Leader)
2. நிர்வாகத் தலைவர் (Bureaucrat Leader)
3. கொள்கை வகுப்புத் தலைவர் (Policy Maker Leader)
4. துறைசார் நிபுணத் தலைவர்(Expert Leader)
5. இலட்சியத் தலைவர் (Ideologist Leader)
6. கவர்ச்சித் தலைவர் (Charismatic Leader)
7. அடையாளத் தலைவர் (Symbolic Leader)
8. தந்தைவழித் தலைவர் (Father Figure Leader)
9. சமயத் தலைவர் (Religious Leader)
இவ்வாறாகத் தலைமைத்துவம் அமைகிறது. ஒருவிதத்தில் கூறப்போகின் “தலைவர்கள் பிறக்கின்றனர் உருவாக்கப்படுவதில்லை”. (“Leaders are born not made”) என மக்ஸ்வெபர் என்பவர் கூறுகின்றார். தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர். பெற்றெடுக்கப்படுவதில்லை எனவும் ஒருசாரார் கூறுவர். பொதுவாக சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் போது தான் தலைமைத்துவப் பண்புகளும் வளர்க்கப்படுகின்றன. ஒருவர் மேலெழுந்து வர செயற்படுத்த வேண்டிய செயலும் வழிநடத்த வேண்டிய அமைப்பும் முக்கிய இடம் வகிக்கின்றன என சமூக உளவியலாளர் கருத்துத் தெரிவிக்கின்றனர். “பதவிகளும் ஒருவரைத் தலைவராக்குகின்றது எனவும் கூறுவர். (“Office makes the man”)
பொதுவாக விலங்குகள், பறவைகளை நோக்கின் உடற்பலரீதியில் ஒன்று இன்னொன்றின்மீது ஆதிக்கம் செலுத்துவதையும் அடிபணிந்து போதலையும் அவதானிக்கலாம். ஆனால் மனிதன் உடற்பலமின்றி அறிவுத்திறன், செயல்திறன், ஆளுமைத்திறன், பிரச்சினைகளை அணுகி ஆராயும் திறன், உள்ளத்திறன், மனோதிடத்திறன் என்கின்ற அடிப்படைக் காரணிகள் மனிதனில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
தலைமைத்துவப் பண்புகள்
1. குழுவின் மதிப்பைப் பெறல் (Like ability)
தலைவர் தன் குழு அங்கத்தவரின் விருப்பத்துக்கும் மதிப்புக்குமுரிய முக்கிய பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும். குழுவின் மதிப்புகள் தலைமைத்தவத்தை பாதிக்கும்.
2. தன்பணிகளில் வெற்றிபெறல் (Task Success)
தலைமைத்தவமானது தான் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியீட்டும் வல்லமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
பணிகளில் ஏற்படும் வழுக்காரு, முயற்சிகள் தோல்வியடைதல் தலைமைத்துவத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. சாதிக்கும் திறன் மிக மிக அவசியம்.
3. ஆளுமைக் கூறுகள் (Personality Traits)
ஒரு குழுவின் தலைவர் அர்ப்பணிப்பு, முன்மாதிhரிகை, விசுவாசம், நேர்மை, மனிதத்துவம் போன்ற ஆளுமைக்கூறுகள் உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு தலைவரில் இருந்து பல தலைவர்கள் தோன்றலாம். அத்துடன் தலைவர் எடுத்துக்காட்டுவதற்குரியவராக அமைதல் அதன் சிறப்பம்சமாகும்.
தான் அங்கம் வகிக்கும் குழுவில் ஆளுகைப் பண்புகள் உடையவராக இருத்தல் சிறப்பானதாகும். அதுமட்டுமல்ல தனது குழுவில் செல்வாக்குடைய ஒருவராக, மதிப்புப் பெற்றவராக இருப்பின் (Dominancy) சிறந்த தலைவராக அமையலாம். மகாத்மா காந்தி அடிகள் தனது அகிம்சை வழியில் வெற்றி பெற அவர் தன் குழுவில் பெற்ற செல்வாக்கும் மதிப்புமே காரணமாகும்.
4. சிறந்த பயிற்றுநர் (Coach)
தனது குழு அங்கத்தவர் செயற்பாட்டை ஊக்குவிப்பவராகவும், பொருத்தமான பொறுப்புகளையும் வழங்குபவராகவும் முன் கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்பவராகவும் (Be proactive) பகிர்ந்து கொள்பவராகவும் இருப்பது தலைமைத்துவத்தின் சிறப்பு பண்புகளாகும். கட்டளையிடுவதைத் தவிர்த்து வேண்டுகோள் விடுப்பவராக இருத்தல் விரும்பத்தக்கது. இன்னொரு விதத்தில் கூறின் தலைவர் ஒரு வாயில் காப்போனாக, ஒவ்வொரு செயலுக்கும் செயற்பாட்டுக்கும் பொறுப்புடையவராக அமைய வேண்டும்.
தலைமைத் தெரிவு
பல்வேறு விதமாகத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.
1. நியமித்தல்(appointing)
2. தெரிந்தெடுத்தல் (Electing)
3. சமூகத் தலைமை (Social leader)
தான் சார்ந்திருக்கும் குழுவுக்கு வெளியே இருந்து ஒருவர் தலைவராக நியமிக்கப்படின் அது நியமித்தல் தெரிவாகும். அரச நிர்வாக சேவைகளை இதற்கு காரணமாக கூறலாம் தான் சார்ந்த குழுவினால் தெரிந்தெடுக்கப்படின் அது தெரிந்தெடுத்தல் முறையாகும். தெரிந்தெடுக்கப்படாமலும் நியமிக்கப்படாமலும் குழு ஒருங்கிணைப்பாளராக அன்றேல் பராமரிப்பவராக உள்ள தலைவர் சமூகத் தெரிவுக்குட்பட்டவர். உதாரணமாக பஞ்சாயத்துத் தலைவர் போன்றோரைக் குறிப்பிடலாம்.
தலைமைத்துவ அதிகாரம்
1. கவர்ச்சிகரமான அதிகாரம் (Charismatic Authority)
இது விதிவிலக்கிற்குட்பட்ட தலைவரிடம் காணப்படுவதாகும். (ளுரிநச hரஅயn) மனித ஆற்றலுக்கு மேற்பட்டவர் உணர்வு ரீதியாகத் தன்னைப் பின்பற்றுவோரை வழிநடத்துபவர்களின் அதிகாரம் இதற்குதாரணமாகும். காந்திமகான், மகா அலக்சாண்டர், பிடல் காஸ்ரோ இத்தகையோராவார்.
2. மரபுரீதியான அதிகாரம் (Traditional Authority)
காலாகாலமாக உறுதி செய்யப்பட்ட வழமையான மரபுகளை இதற்குதாரணமாகக் குறிப்பிடலாம். (Inherited Leadership) இது மரபுரிமையில் பெறப்பட்ட தலைமைத்துவமாகும். பரம்பரையாக வரும் மன்னர்கள், பிரபுக்கள் மன்னர்கள் அதிகாரங்கள் இதற்குதாரணமாகும்.
3. சட்டவரம்பிற்குட்பட்ட நேரறிவான அதிகாரம் (Rational – Legal Authority)
மேற்கூறப்பட்ட இருவகையான அதிகாரங்களையும் சாராத தனிமனிதன் சாராத கூட்டு விதிகள் கொண்டது நேரறிவான சட்டவரம்பிற்குட்பட்ட அதிகாரங்களாகும். (Set of impersonal rules) நீதிபதி, இராணுவத்தளபதி போன்றோரின் தலைமைத்துவம் அதிகாரங்கள் இதற்குதாரணமாகும்.
ஆக்கச்சிந்தனையும் தலைமைத்துவமும்
தலைமைத்துவத்தை நோக்கின் நலிவான சிந்தனையுடனான தலைமைத்துவம் முக்கியமாகத் தோல்விக்கே இட்டுச் செல்லும். நலிவான சிந்தனைகளை வெற்றி கொள்வதற்கு ஆக்க பூர்வமான சிந்தனைகள் துணையாக அமையும். ஆக்கபூர்வமான சிந்தனை என்பது “கற்பனை செய்வது முதல் கனவுகாணலாகும்” அது புதிய கருத்துக்கள் பிறப்பிக்கப்படுவதற்கும், யாதாயினும் ஒன்றை ஆக்கபூர்வமாக நோக்குவதற்கும் முன்னர் தொடர்குளைக் காண முடியாமல் போனவற்றைப் புதுப்பித்து தொடர்புகளைக் காணவும் துணையாக அமையும். அது விடுசிந்தனை (Divergent Thinking) ஆகும். எனவே ஆக்கச் சிந்தனை தலைமைத்தவத்தை வளர்ப்பதற்கும் பொதுவாகக் கூறின் தான் சார்ந்துள்ள குழு அங்கத்தவர்களின் சிறப்பான செயற்பாடுகளும் எடுக்கப்படும் முயற்சிகளின் வெற்றி தோல்வியும் சிறந்த தலைமைத்தவமே காரணமாக அமைகின்றது எனலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment