Tuesday, June 3, 2014

மூளையின் திறமைமிக்க செயற்பாடுகளைக் கொண்டவர்கள் சமூகவாழ்வில் வெற்றி அடைந்தார்கள்.



ஒரு நாள் இரவு அவருடைய கட்டிலில் பூச்சிகள் பல கூடுகட்டி விட்டன. அவர் மெத்தையை தூக்கித் தூக்கிப் பார்த்தார் ஒன்றையும் காணவில்லை! கனவுகள் இப்படிச் சில சமயங்களில் விழித்த பின்னும் நனவு போல இருப்பது ஏன்?

பாடசாலை மாணவரிடையே ஒழுக்கக் குறைவும், ஆக்ரோஷ உணர்வும், வன்முறை நடத்தைகளும் மிக வேகமாக அதிகரித்து வருவதை பலரும் அவதானித்துள்ளனர். இவற்றைத் துண்டும் காரணிகள் எவை?

நாலு பிள்ளைகளை கொண்ட ஒரு குடும்பத்தின் தந்தையும் தாயும் மணவிலக்குப் பெற தீர்மானித்து விட்டனர். தான் பிரிந்து வாழவும், மணவிலக்கு பெறவும் தேவையான வலிமையான நியாயங்கள் இருப்பதை பெண் நீதிமன்றில் நிறுவியுள்ளார். ஆயினும் இந்த நிகழ்வு அவர்களின் பிள்ளைகளில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது.?

தமது உடல் நிறையை குறைப்பதற்கு கோடிக் கணக்கான மக்கள் முயன்று வருகின்றார்கள். (குறிப்பாக பெண்கள்) இந்த நிறைக் குறைப்பிலே ஹிப்னோசிஸ் (hypnosis) உதவும் என்று சஞ்சிகை ஒன்றில் வெளியான கட்டுரை கூறுகின்றது. இது உண்மைதானா? உடல் நிறையை குறைப்பது ஏன்தான் இவ்வளவு கடினமாக இருக்கின்றது.?

ஒருவீட்டில் ஒரு பூனைக்குட்டி இருக்கின்றது. நீங்கள் எவ்வளவு தான் கஷ்ரப்பட்டு எப்படி அழைத்தாலும் அது குசினிக்குள் வர மறுக்கின்றது. தூக்கித்தான் கொண்டுவந்து குசினிக்குள் விட்டாலும், அடுத்த கணமே பாய்ந்து வெளியே ஓடி விடுகின்றது. வீடுமுழுவதும் குசாலாக ஓடித்திரியும் பூனைக்குட்டிக்கு இந்த குசினி தொடர்பான பயம் எப்படி ஏற்பட்டிருக்கலாம்?

தனக்கு நெஞ்சு நோவும் நெஞ்சிறுக்கமும் அடிக்கடி ஏற்படுவதாயும் மூச்சு விட மிகவும் சிரமமாக இருப்பதாகவும் ஒரு பெண் முறைப்பாடு செய்துள்ளார். அவரைப் பரிசோதித்த வைத்திய நிபுனர்கள் அவருக்கு இதயத்திலோ, நுரையீரலிலோ அல்லது நெஞ்சின் வேறு வேறு எந்தப் பகுதியிலுமோ எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறுகின்றார்கள். அப்படியானால் அந்தப் பெண்ணின் முறைப்பாடு பொய்யா?

மேலே கூறப்பட்ட வினாக்களுக்கு இன்னும் இவற்றைப் போன்ற ஆயிரக் கணக்கான வினாக்களுக்கம் விடை தருகின்ற மிகச் சுவாரசியமான விஞ்ஞானத்துறை உளவியல். அது மனதையும் ஆன்மாவையும் பற்றிய கற்கை. அதனால் கற்றல், ஞாபகம், அமாழி, எண்ணம், உணர்வு, ஊக்கல், மணமுறிவு, பாலியல் வன்முறை, இனவாதம், பழமைபேணல், சூழல் மாசடைதல், உள ஆரோக்கிய விருத்தி, வாழ்வு முறைகள் பதற்றம், தொடர்பாடல், சில உடல் நோய்களுக்கும் உணர்வுக்கும் உள்ள தொடர்பு, ஜெற் விமான வடிவமைப்பு போன்ற பல விடயங்களை ஆராயும் விஞ்ஞானமாக உள்ளது.

உளச் செயற்பாடுகள், நடத்தைகள் ஆகிய விடயங்களில் குவியம் கொண்டுள்ள இந்த விஞ்ஞானம், மருத்துவ உளவியல், விருத்தி உளவியல், கைத்தொழில் உளவியல், பரிசோதனை உளவியல், அறிக்கை உளவியல், பாடசாலை உளவியல், உடற்றொழில் உளவியல் என்று தொடர்ந்து விரிந்த வண்ணம் உள்ளது.

Wilhelm Wundt என்பவரே விஞ்ஞான பூர்வமான உளவியலின் தந்தை எனப் பேசப் படுகின்றார். அவரைத் தொடர்ந்து வந்த உளவியலாளர்கள் பலரும் முன்வைத்த கொள்கைகளின் அடிப்படையில் அவர்களை நான்கு பெரிய பிரிவுக்கள் அடக்கலாம்.
1. நடத்தை வாத உளவியல்.
2. அறிக்கை வாத உளவியல்.
3. மனிதாய வாத உளவியல்.
4. உளப் பகுப்பாய்வு வாத உளவியல்.

John Watson என்பவரை நடத்தைவாத உளவியலாளர் குழுவின் முதல்வர் எனலாம். “என்னிடத்தில் ஒரு குழந்தையை தாருங்கள் நீங்கள் விரும்பியபடி அவரை ஆக்கிக் காட்டுவேன். வைத்திய நிபுணராகவோ? கள்வர் தலைவனாகவோ? என்று சூளுரைத்தார் உவொட்சன் தூண்டி ஒன்று துலங்கலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் உருவான இக்கொள்கை 1960 வரையான காலப் பகுதியில் மிக முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருந்தது.

அறிக்கை வாத உளவியலாளரின் முன்னோடி என Ulric Neisser ஐக் கூறலாம். தூண்டி ஒன்று துலங்கலை ஏற்படுத்துவதற்கு இடையில் மூளை என்ற கறுப்புப் பெட்டி ஒன்று உள்ளது.

                                 


அந்தக் கறுப்புப் பெட்டிக்குள் என்ன நடைபெறுகின்றது என்பதே முக்கியமான விடயம் என்று இந்தக் குழு கூறியது. 1970களில் இவர்களின் கருத்து முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. சிலரது மூளை இரண்டு சிக்கலான விடயங்களைக் கூட ஒரே நேரத்தில் சமாந்திரமாக செய்து முடித்து விடுகிறது என்று இக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

மனிதாயவாத உளவியலாளர்களில் முக்கியமானவர் Maslow. மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள் என்பது இவரது ஆணித்தரமான கருத்து. அவர்கள் தங்களைத் தாங்களே புரிந்து கொள்வதற்கும் தமக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களின் உச்சத்தை வெளிக் கொணரவும் உதவவேண்டும் என்று இக்குழு கருதியது. சுயதிறன் நிறைவு பெற்ற மனிதர்களைப் பற்றி இவர்கள் மிக அக்கறை காட்டினார்கள்.

உளப் பகுப்பாய்வுக் கொள்கையின் பிதாமகர் Sigmund Freud மனிதர்களின் கனவுகள் அவர்களின் சுயாதீன உரையாடல்கள் ஆகியவற்றின் மீது இவர் அதிக ஈடுபாடு காட்டினார். நனவிலி மனதின் விருப்பங்கள், பயங்கள் முரண்பாடுகள், உந்தல்கள் பற்றி நிறையவே பேசினார் நனவிலி மனத்தை நனவு மனதுக்கு நெருங்கி வரச் செய்வதே வெற்றியின் அடிப்படை என்று கருதினார். தற்செயலாக வருகின்ற சொற்கள், நாத்தவறி வருகின்ற வசனங்கள், நகச்சுவை கருதிக் கூறப்படும் விடையங்கள் அனைத்தும் அர்த்தம் பொதிந்தவை என்று கூறினார். ஆழ்மனத் தொடர்பில்லாமல் அவை வெளிவராது என்பது அவரின் கருத்து.

உலகமகாயுத்தத்தின் போது ரஷ்யப் போர்வீரர் ஒருவருக்கு தலையின் இடதுபக்கம் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவருக்கு உலகம் துண்டுதுண்டாக தெரிந்தது. ஒரு பொருளும் முழுமையாகத் தெரியவில்லை. ஆகவே வெளி பற்றிய அவரது பிரக்ஞையில் மாற்றம் ஏற்பட்டது. அதன் விளைவாக அவரது நடத்தை பெரிதும் மாறியது. ஆகவே ஒருவரது அறிக்கையிலும் நடத்தையிலும் மூளை மிகப்பெரிய பங்கு வகிப்பது தெளிவு. எமது உடலில் உள்ள திரில்லியன் கணக்கான கலங்களை எமது நரம்புத் தொகுதியும், அகஞ்சுரக்கும் தொகுதியும் சேர்ந்து வழிப்படுத்துகின்றன.

எண்ணம், நினைவு விடயங்களைக் கிரகித்தல், மொழியைப் பாவித்தல் போன்ற முக்கிய விடயங்களை மனித மூளை கட்டுப்படுத்துகின்றது. மூளையின் திறமைமிக்க செயற்பாடுகளைக் கொண்டவர்கள் சமூகவாழ்வில் வெற்றி அடைந்தார்கள். ஆகவே படிப்படியாக நுண்மதி ஆற்றல் கூடிய மனித இனம் கூர்ப்படைந்து வருகின்றது. வாழ்விலே போட்டிக்கும் ஒற்றுமைக்கும் இடையில் சரியான சமனிலையை பேணிக்கொள்ளும் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.

No comments:

Post a Comment