Wednesday, February 11, 2015
பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள – உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா
பெற்றோர்களின் பங்கு:
குழந்தையின் பாதுகாப்பில் நீங்கள் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் துரதிர்ஷ்டவசமாக அதை எப்போதும் செயல்படுத்த முடியவில்லை
என்பதும் எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அவர்கள், சுய பாதுகாப்பு நடத்தையை வளர்த்துக் கொள்ளத் தேவையான தகவல்களையும் திறன்களையும் நீங்கள் அவர்களுக்கு வழங்கமுடியும்.
உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்குத் தேவையான மிக முக்கியக் காரணியானது, ஒரு வலிமையான தன்னைத் தானே உயர்வாக மதிக்கும் குணம் ஆகும். இதை நீங்கள் அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் உங்களோடு பேச விரும்பும்போது அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். சிக்கலான, மற்றும் கடினமான கேள்விகளை அவர்கள் கேட்கும்போது வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பதில் கூறுங்கள். எப்போதும் உங்கள் குழந்தை சொல்வதையே நம்புங்கள் - அது நம்பமுடியாததாகவும் நம்புவதற்குக் கடினமாகவும் இருந்தாலும் கூட.
குழந்தை பாலியல் கொடுமையைப் பற்றி உங்கள் குழந்தையோடு பேசுவது என்பது சிரமமாக இருக்கலாம். ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதைவிட மிகவும் மோசமானவை. அவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகலாம். யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தவிக்கலாம்.
குழந்தையிடம் குழந்தை பாலியல் கொடுமை பற்றி உண்மையில் பேசுவது கடினம். எனவே அதைப் பற்றி உங்கள் குழந்தையிடம் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்பது ஒரு சிக்கலான செயலாக இருக்கலாம்.
அதற்கு இதோ, சில ஆலோசனைகள் :
ஆண்-பெண் பாலியல் உறவு என்பது ஒரு இயல்பான விஷயம் என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொண்டு, உங்களிடம் உள்ள இறுக்கத்தைத் தளர்த்துங்கள். குழந்தையிடம் பேச ஆரம்பிக்கும் முன்னர் தகவல்களை நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம்.
பொதுவான, மற்றும் சுய பாதுகாப்பு விதிமுறைகளை குழந்தைக்கு உருவாக்கிக் கொடுங்கள் எடுத்துக்காட்டாக, வீதியைக் கடக்கும்போது இரண்டு புறமும் பார்க்கவேண்டும் அல்லது தீக்குச்சியை வைத்து விளையாடக்கூடாது என்பது போன்ற பாதுகாப்பு விதிகளைக் கற்றுக் கொடுங்கள். இவற்றோடு கூடவே சுய பாதுகாப்பு விதிமுறைகளையும் கற்றுக் கொடுங்கள்.
இயல்பாகவே குழந்தை ஆவலுடன் கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 'குழந்தைகள் எங்கிருந்து வருகின்றன?' அல்லது 'பாலியல் உறவு என்றால் என்ன?' போன்ற கேள்விகளைத் தவிர்க்காதீர்கள். கேள்விகளுக்கு விடைகூறி குழந்தையின் இயல்பான ஆவலுக்கு மதிப்பளியுங்கள். இல்லையெனில், ஆவலைத் தீர்த்துக்கொள்ள, முறையற்ற வேறு வழிகளை அவள்ஃஅவன் நாடக்கூடும்.
'ஒரு வேளை அப்படி நடந்தால்'......... விளையாட்டைக் குழந்தையுடன் விளையாடவும். எடுத்துக்காட்டாக, 'ஒரு வேளை கடைத்தெருவில், நாம் பிரிந்துபோய் உன்னால் என்னைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீ என்ன செய்வாய்? '
'ஒரு வேளை உன் தனிப்பட்ட உடல் உறுப்புகளை எவரேனும் தொட முயன்றால், நீ என்ன செய்வாய்?' என்றெல்லாம் குழந்தையைக் கேளுங்கள்.
குழந்தைக்குத் தொடர்புடைய, பழக்கமான சூழலைப் பயன்படுத்துங்கள். சரியான விடை சொல்ல குழந்தையை ஊக்கப்படுத்துங்கள்.
கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்த குழந்தைகள் பற்றியும் அவர்கள் எப்படி அந்தக் கஷ்டங்களைச் சமாளித்தார்கள் என்பது பற்றியும் உள்ள கதைகளைக் குழந்தைகளுக்குப் படித்துக் காண்பியுங்கள். இந்தக் கதைகளைப் படிப்பது மூலம் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றி நம்பிக்கையூட்டும் எண்ணத்தைக் குழந்தையிடம் ஏற்படுத்த முடியும். குழந்தை சந்திக்கும் பிரச்சினைகள், அதற்குத் தேவையான உதவி போன்றவற்றைப்பற்றி உங்களிடம் குழந்தை பேச இது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
குழந்தை பாலியல் கொடுமையைத் தடுக்கச் சில குறிப்புகள்.
குடும்பப் பாதுகாப்பு விதிகளை உருவாக்குங்கள் .
உங்கள் குழந்தை எப்போதும் எங்கேயும் யார் யாருடன் தனியாக இருக்க அனுமதிப்பீர்கள் என்று பட்டியல் இடுங்கள். (நீங்கள் கூறும் பெயர்களுக்கு உங்கள் குழந்தையின் பதில் என்ன என்பதைக் கவனமாகக் கேளுங்கள்).
தங்களைப் பற்றிய சொந்த விவரங்களை மற்றவர்களிடம் சொல்வதை ஊக்கப்படுத்தாதீர்கள்.
தொடுதல் குறித்த சுய பாதுகாப்பு விதிகள்.
தனிப்பட்ட உடல் உறுப்புகளைக் குறிக்கும் சரியான சொற்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத் கொடுங்கள்.
சிறிய குழந்தை என்றால் பேசும் மொழியைப் பயன்படுத்தலாம். உறுப்புகளுக்கான பெயர்களை பயன்படுத்துங்கள். வேறு ஒரு பொருளைக் குறிக்கும் சொற்களைத் தனிப்பட்ட உடல் உறுப்புகளைக் குறிக்கப் பயன்படுத்தாதீர்கள். (பூ, பாம்பு போன்ற சொற்கள்).
நம் எல்லோரைப் போலவும் குழந்தைகளுக்கும் தனிப்பட்ட இடப்பரப்பை பெறும் உரிமை உண்டு. அதற்குள் யாரை அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்கும் உரிமையும் உண்டு.
இது பற்றிய விதிகளைக் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள். அவர்களுடைய தனிப்பட்ட இடப்பரப்பை யாரேனும் ஆக்கிரமிக்க முயன்றால் தமது உரிமையை நிலைநாட்டுவது எப்படி என்று கற்றுத் கொடுங்கள்.
குழந்தையின் உணர்வுகளை வலியுறுத்துங்கள்.
தனிப்பட்ட உணர்வுகளைக் கொண்டிருக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதையும் கற்றுக்கொடுங்கள் மரியாதையோடு, 'வேண்டாம்', 'இல்லை', முடியாது என்று அவர்களால் கூற முடியும்.
இரகசியங்களைப் பாதுகாப்பது சரியல்ல என்று கற்றுத் தாருங்கள், முக்கியமாகக் குடும்பப் பாதுகாப்பு விதிகளை மீறும் செயல்பாடுகளை இரகசியமாக பாதுகாத்தல் சரியில்லை என்று உணர்துங்கள்.
குழந்தையின் சுயமதிப்பை வளர்க்க உதவுங்கள்.
பாலியல் கொடுமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் நடந்தவற்றை உங்களிடம் கூறவும் அவர்களுக்கு வலிமையான சுயமதிப்பு தேவை.
பிரச்சினை ஏற்பட்டால் நம்பிக்கைக்கு உரிய நபர்களிடம் தொடர்பு கொள்ளக் கற்றுத் கொடுங்கள். தங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் கூட வேதனை எற்படுத்தும் செயல்களைச் செய்யக்கூடும் என்பதைக் குழந்தைகள் தெரிந்துகொள்ளவேண்டும். மனிதர்களைப் பார்ப்பதைவிட குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் செயல்களையும் பார்ப்பதற்கு உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தாருங்கள்.
குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பணியில் உள்ளவர்களின் பின்னணியையும் அத்தாட்சியையும் கவனமாகப் பரிசீலனை செய்யவும். (முயல்,மீன், புறா வளர்க்கின்றவர்,ஆயா, டிரைவர், சமையல்காரர் போன்றவர்கள்).
உங்கள் குழந்தை பாலியல் கொடுமையை அனுபவித்து உள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்வீர்கள்? குழந்தை உங்களிடம் அதை நேரடியாகக் கூறச்செய்வதே சிறந்த வழி. எனினும், கொடுமைக்கு ஆளானதைப் பற்றிக் கூறுவது கஷ்டமான செயல். உங்களிடம் நேரடியாகச் சொல்லமுடியாத பிரச்சினைகளை குழந்தைகள் தமது நடத்தை மூலம் வெளிப்படுத்துகிறார்கள். உடலியல் அறிகுறிகள் கொடுமை நிகழ்ந்ததை எடுத்துக்காட்டலாம்.
குழந்தை தொடுதல் பிரச்சினையைப் பெற்றோரான நீங்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
குழந்தைகள் தமது சொற்கள், மற்றும் நடத்தை மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். பெரியவர்களாகிய நாம் அவர்கள் பேசும்போது கவனமாகக் கேட்கவேண்டும், அவர்களுடைய குறிகளும் நடத்தையும் என்ன சொல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சினைகள் பற்றிக் குழந்தைகள் நம்மிடம் பேசவில்லை என்றால், நாம் அவர்கள் கூறுவதைக் கவனமாகக் கேட்காததோ அல்லது தேவையான போது உடன் இல்லாமல் போவதோ அதற்கு காரணமாக இருக்கக்கூடும். பெற்றோரான நீங்கள் உங்கள் குழந்தையின் பாதுகாப்பிலும் அவர்கள் கொடுமைக்கு ஆளானால் மீண்டு வருவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். நடந்ததைத் தெரிவிக்கும்போது நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது உங்கள் குழந்தையின் மற்றும் உங்களின் நலனுக்கு மிகவும் முக்கியம். கொடுமைக்கு ஆளானதைப் பற்றிக் குழந்தை தெரிவிக்கும்போது பெற்றோருக்கு அதிர்ச்சி, அவநம்பிக்கை, மறுப்பு, தன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொள்வது, கோபம், குழப்பம் மற்றும் அல்லது சந்தேகம் ஏற்படுவது இயல்பு.
பின்வரும் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் :
குழந்தையை நம்புங்கள்.
அமைதியாக இருங்கள்.
குழந்தையின் உணர்வுகளை ஆமோதியுங்கள்
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று குழந்தைக்குத் தெரிவியுங்கள்.
குழந்தையை ஆதரியுங்கள்.
கொடுமையை வெளியே தெரிவித்து உதவியை நாடுங்கள்.
குழந்தை கொடுமைக்கு ஆளாகி உள்ள போது தான் கொடுமைக்கு ஆளான அனுபவங்களைக் குழந்தை தெரிவிக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி மேலும் தெரிந்து கொள்ள.
குழந்தை பாலியல் கொடுமையின் அறிகுறிகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள.
பாடசாலைகளின் பங்கு:
குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக நடந்துக் கொள்ளும் வழிமுறைகளை பயனுள்ள வகையில் கற்றுக்கொடுக்கவும் அந்தப் பயிற்சி ஒரே சமயத்தில் பல குழந்தைகளைச் சென்றடையவும் வேறெந்த அமைப்பையும் விட, ஏன் பெற்றோரைவிடவும் கூட, அதிக ஆற்றலுடையவை பாடசாலைகள் என்பதால் குழந்தைகளைப் பேணிக் காக்கும் பணியில் அவை முன்னிலை வகிக்கின்றன. ஏனெனில், ஒரு குழந்தையின் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பகுதி பாடசாலையில்தான் கழிகிறது. அது மட்டுமின்றி குழந்தையின் நடவடிக்கையையும் குறிப்பிட்ட காலகட்டத்தில் உடற்கூறில் ஏற்படும் மாற்றத்தையும் அருகிலிருந்து கண்டுணரும் வாய்ப்பு, அறிவு, ஆற்றல் மற்றும் பயிற்சியைப் பெற்றிருப்பதால், குழந்தை பாலியல் கொடுமைக்கு எதிரான போரில் பள்ளியில் பணிபுரியும் நீங்கள் சிறப்புப் பங்கு வகிக்கிறீர்கள். மேலும், குழந்தைகளுடன் தினமும் நெருங்கிப் பழகுவதால் உதவியும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளை எளிதில்
அடையாளம் கண்டு கொண்டு, அவர்களைக் கூர்ந்து கவனிக்கக்கூடிய அரிய வாய்ப்பையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
குழந்தை பாலியல் கொடுமையைத் தடுக்க பாடசாலைகள் என்ன செய்யலாம் ?
குழந்தைகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் போன்றோர் உரிய சோதனைக்கும் பயிற்சிக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குழந்தை பாலியல் கொடுமையைப் பற்றி தெரிவிக்கவும் அது போன்ற நடத்தைகளைக் குழந்தைகள் தெரிவிக்கும் போது அதைப் பக்குவமாகச் சமாளிக்கவும் ஒரு வலுவான வழிமுறையை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பாடசாலையில் கணிணிகளைப் பயன்படுத்தும் முறையை நெறிப்படுத்த பொருத்தமான உடன்பாடு ஒன்றை நடைமுறைப்படுத்தி அது சரியான முறையில் நடந்து வருகிறதா என்பதை அறிய அவ்வப்போது சோதனை மேற்கொள்ளுதல் அவசியம். கணிணிகளைப் பயன்படுத்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும்.
பாடசாலையின் சுற்றுப்புறவடிவமைப்பைக் கணித்து அதை மாணவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலாக மாற்றத் தேவையான முயற்சிகளைச் செய்தல் அவசியம்.
பாடசாலைக்கு வருகைபுரியும் அனைவரும் பாடசாலை அலுவலகத்தில் தகுந்த முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படவும் சந்தேகத்திற்குள்ளாகும் விருந்தினர்களையும்
வழக்கத்திற்கு மாறான சம்பவங்களையும் திறம்படக் கையாளும் வகையில் பாடசாலை வளாகத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
பாடசாலையிலும் வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்றுவரும் வழியிலும் குழந்தைகள் பாதுகாப்பு வழிமுறைகளைச் சிறப்பாகக் கையாளச் சொல்லித் தரவும் அதில் பங்கேற்கவும் பெற்றோருக்குச் சிறப்புத் திட்டங்களை வழங்க வேண்டும்.
ஒப்புக் கொள்ளப்பட்ட கல்விக் கோட்பாடு, குழந்தையின் வயது, கல்வி மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் பாதுகாப்புத் திட்டங்களை வடிவமைக்கவோ தேர்ந்தெடுக்கவோ செய்யுங்கள். குழந்தை எந்தவிதமான சூழ்நிலையையும் கையாளவும் தன்னைப் பாதுகாத்து கொள்ளத் தேவையான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் உதவும் வகையில் கருத்துக்ளை வழங்குமாறு இவை வடிவமைக்கப்பட வேண்டும். பல வருடங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு பலனை வழங்கிய பலவிதத் திட்டக்கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு இவை அமைக்கப்பட வேண்டும். குழந்தைகளின் ஆக்க பூர்வமான முழுப்பங்கேற்பையும் வெளிக் கொணரும் திறமையும் பயிற்சியும் பெற்றவர்களால் இந்தத் திட்டங்கள் வழங்கப்படுவது நன்மை பயக்கும்.
சமூகத்தின் பங்கு
முதலில்,தெரிந்துகொள்ளுங்கள் :
குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமை பற்றியும் அவர்களின் உரிமை பற்றியும் நிறையத் தெரிந்துக்கொள்வதன் மூலம் உங்கள் குடும்பத்திலும் அக்கம்பக்கத்திலும் உள்ள குழந்தைகளை உங்களால் பாதுகாக்க முடியும். குழந்தைகள் உங்களிடம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு மனதில் இருத்துங்கள்.
அடுத்து,சிந்தித்துப் பாருங்கள் :
பாலியல் கொடுமைகள் நடப்பதற்கு நீங்கள் எந்த வகையிலேனும் காரணமாக இருக்கிறீர்களா என்று சிந்தித்துப் பாருங்கள்.
பின்னர் கற்றுக்கொடுங்கள் : குழந்தைகள் எங்கேயும் எப்போதும் பத்திரமாக உணர்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று அறிவுறுத்துங்கள்.
பேசுங்கள் :
உங்கள் குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமை பற்றி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உளவள ஆலோசகர்களிடம் முறையிடுங்கள், குழந்தைக்கு இழைக்கப்படும் கொடுமை பற்றிய மௌனத்தைக் கலையுங்கள்.
ஊக்கமூட்டுங்கள் :
குழந்தைகளுக்கு அறிவுறுத்துவதற்காகவும் கொடுமைகள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குக் கை கொடுங்கள். பெரும்பாலும் கொடுமை நடந்த பிறகே அது வெளியே தெரிய வருகிறது.
எடுத்துக்கூறுங்கள் :
குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கும்படியும் அவர்களைப் பாதுகாக்கும்படியான திட்டங்களை மேற்கொள்ளும்படியும் பள்ளிகளிடம் எடுத்துக்கூறுங்கள்.
உதவுங்கள் :
ஒரு குழந்தை கொடுமைக்கு ஆளாவதாகத் தெரியவந்தால் அதற்கு உதவி அளியுங்கள். உடனே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உளவள ஆலோசகர்களின் உதவியை நாடுங்கள்.
ஈடுபாடு காட்டுங்கள் :
குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்களின் நடவடிக்கைகளில் நீங்களாக முன்வந்து பங்குகொள்ளுங்கள்.
றினோஸ் ஹனீபா
உளவள ஆலோசகர்
மகளிர் விவகார அமைச்சு,
கல்முனை பிரதேச செயலகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment